மதுரையில் உள்ள சினிமா தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடுவது தொடர்பாக, மதுரையை சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட காட்சிகளை காட்டிலும், சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு, அதிகளவில் கட்டண வசூல் செய்யப்படுவதாகவும், இதனால் பலகோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, இனி வரும் காலங்களில் மதுரை தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். இது குறித்து பதிலளிக்க, மத்திய கலால் வரி துறையின் முதன்மை ஆணையர், மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டும், வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.