வேலூரில் மக்களவை தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
வேலூர் தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வேலூர் மக்களவை தொகுதியில் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக ஆயிரத்து 553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 179 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. வி.வி. பேட் இயந்திரங்களும் வாக்களிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தேர்தலை ஒட்டி 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு துணை ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.