கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலையை, பெருங்குடி குப்பை வளாக பகுதியில் தேடும் பணி 2வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில், கடந்த மாதம் 21ஆம் தேதி பெண்ணின் இரண்டு கால், கை கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 16 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று துப்பு துலங்கியது. அதன்படி, கொல்லப்பட்ட பெண் கன்னியாகுமரியை சேர்ந்த சந்தியா என்பதும், அவரது கணவர் பாலகிருஷ்ணன் படுகொலை செய்து, உடலை வெட்டி வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், சந்தியாவின் பிற உடல் பாகங்கள் குறித்த அவரிடம் விசாரணை நடத்தினர். பாலகிருஷ்ணன் அடையாளம் காட்டிய ஈக்காட்டுத்தாங்கல் கூவத்தில் இருந்து சந்தியா உடலின் மற்றொரு பாகம் மீட்கப்பட்டது. இந்தப் பகுதியை வைத்து ஏற்கனவே மரபணு சோதனை நடத்தப்பட்ட உறுப்போடு ஒத்துப்போகிறதா என்று மருத்துவ சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். தலை மற்றும் வயிறு பகுதியை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெருங்குடி குப்பை கிடங்களில் தலையை தேடும் பணி 2வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.