ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரம்

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுபட்டியில் 2 வயது ஆண் குழந்தை சுர்ஜித் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்ததை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது 68அடி ஆழத்தில் குழந்தை இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. குழந்தை பத்திரமாக மீட்க ஆழ்துளை கிணறு அருகே, பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சியும் பலன் அளிக்காததால், மதுரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த பிரத்யேக கருவி மூலம் குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது குழந்தையின் ஒரு கையில் கயிறு போடப்பட்ட நிலையில், மற்றொரு கையிலும் கயிறு போடும் முயற்சி தோல்வி அடைந்தது. தகவலறிந்து வந்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் மீட்பு பணி குறித்து கேட்டறிந்தார். மீட்பு பணி நடைபெறும் இடத்தில் முகாமிட்ட அமைச்சர்கள், குழந்தை மீட்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆழ்துளை கிணறு அருகே மீண்டும் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. 5 பொக்லைன்கள் மூலம் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் பள்ளம் தொண்டும் பணி நடைபெற்றது. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை மீட்கப்பட்டவுடன் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே சுஜித்திற்கு உற்சாகமூட்டும் வகையில், சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை வைத்து பேச வைத்தனர் . சுஜித் தாய் மேரி, “அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே” என்று கூறியதற்கு “உம்” என்று சுஜித் பதிலளித்துள்ளார்.இதனையடுத்து குழந்தை பத்திரமாக மீட்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முயிற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கோவையிலிருந்து வந்த ஐ.ஐ.டி குழுவினர், நவீன கருவி மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியும் பலன் அளிக்காததால், நாமக்கல் மாவட்டத்திலிருந்து வந்த மற்றொரு குழுவினர், நவீன கருவி மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version