திமுகவினரிடையே ஏற்பட்ட உட்கட்சி பூசலால் பரபரப்பு

குமரி மாவட்டத்தில் திமுகவினரிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜிற்கு எதிராக அக்கட்சியினரே சதி செய்தது அம்பலமாகியுள்ளது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்தினம் குமரியில் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் ஆன்றோ என்பவரும் பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற திமுக உறுப்பினர் மனோ தங்கராஜின் உதவியாளராக கூறப்பட்ட ஆல்டோ என்பவரும் குவாரி தொடர்பாக பேரம் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த வீடியோவில் உள்ள ஆல்டோ என்பவர் தனது உதவியாளர் இல்லை என கருங்கல் காவல்நிலையத்தில் குவாரி உரிமையாளர் மீது
எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் புகார் அளித்தார்.

இந்த விவகாரத்தில் தொடர் விசாரணை மேற்கொண்ட போலீசார், வீடியோவின் பின்னணியில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் இருப்பதை கண்டறிந்தனர். மனோ தங்கராஜூக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் திமுகவில் மாவட்ட பொறுப்பில் உள்ள ஷாஜின், ஜோசப் மற்றும் செல்வின் ஆகியோர் மூளையாக செயல்பட்டுள்ளதும் தெரியவந்தது.

திமுகவினர் இடையில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக எம்எல்ஏ மனோ தங்கராஜூக்கு எதிராக அக்கட்சியினரே செயல்பட்டு, வைரல் வீடியோவை வெளியிட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Exit mobile version