வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் ஹெட்மையர் 76 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார்.பின்னர் 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் 4 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி, ரோகித் ஷர்மாவுடன் சேர்ந்து அதிரடியாக ஆடினார். விராட் கோலி 140 ரன்களை எடுத்து அவுட் ஆனார். ரோகித் ஷர்மா 152 ரன்களுடனும், அம்பத்தி ராய்டு 22 ரன்களுடனும் இறுதியில் களத்தில் இருந்தனர்.
42.1 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.