ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.பி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடிச்சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணியை முறித்துகொண்ட பிறகு தெலுங்கு தேசம் கட்சிக்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தெலுங்கு தேச கட்சி பிரமுகர்களை குறி வைத்து ஆந்திரா முழுவதும் வருமான வரிச்சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனைகள் குறித்து தெலுங்குதேச எம்.பி , சி.எம். ரமேஷ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் வருமான வரித்துறையினர் , சி.எம்.ரமேஷ் எம்.பி வீடு மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.கடப்பா மற்றும் ஐதராபாத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் 60 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கடப்பாவில் உள்ள ரமேஷ் எம்.பி வீட்டில் மட்டும் 15 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
வருமான வரித்துறை சோதனை குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில்,கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் மோடி அரசின் ஆபரேஷன் கருடா திட்டத்தின் ஒரு பாகமே ஆந்திராவில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை என குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக நாங்கள் பயப்படமாட்டோம் என கூறியுள்ள அவர், மத்திய அரசின் தலையை வணங்க வைத்து எங்கள் உரிமையை பெறுவோம்’ என கூறியுள்ளார்.