அமெரிக்காவில் கொரோனா வைரசால் 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஒரு கோடியே 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து லட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 32 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை, ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பலியான 43 சதவீதம் பேர், 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர், 45 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களில் 45 வயது முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 86 சதவீதம் பேர், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.