கொரோனா வைரஸ் தொற்று உலகையே புரட்டிப்போட்ட நிலையில், ஊரடங்கால் கோடிக்கணக்கானோர் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இந்தியாவில் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், தனியார் பேருந்து மற்றும் சுற்றுலா டாக்ஸி தொழிலில் ஈடுபட்டிருந்த 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, போக்குவரத்து துறை முற்றிலும் முடங்கியுள்ளது. டாக்ஸி, பேருந்து, ரயில், கப்பல், விமானம் என அனைத்து போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
இந்தியாவில் தனியார் பேருந்து மற்றும் சுற்றுலா டாக்ஸி தொழிலாளர்கள் மட்டும் 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக B.O.C.I. எனப்படும் இந்திய பேருந்து மற்றும் கார் ஓட்டுனர்களுக்கான கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஊரடங்கு காரணமாக ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. தற்போது வரை 20 லட்சம் பேர் வேலையிழந்துள்ள நிலையில், மேலும் 20 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயமும் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் கூட்டமைப்பில் 15 லட்சம் தனியார் பேருந்துகளும், 11 லட்சம் சுற்றுலா டாக்சிகளும் இயங்கி வந்ததாகவும், அதன் மூலம் 20,000 ஓட்டுனர்கள் உட்பட ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றதாகவும் B.O.C.I தெரிவித்துள்ளது. தற்போது அனைவரின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.((இது தொடர்பாக பேசிய கூட்டமைப்பின் தலைவர் பிரசன்ன பட்வர்தன்,)) ஊரடங்கின்போது தங்களது வாகனங்கள் 95% இயங்கவில்லை என்றும், புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துச்செல்லுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும், இதனால், தொழிலாளர்களின் வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக BOCI கூறியுள்ளது.
மொத்தமுள்ள ஒரு கோடி தொழிலாளர்களில், குறைந்தபட்சம் 30 முதல் 40 லட்சம் பேர், எதிர்வரும் நாட்களில் வேலை இழப்பார்கள் என்றும், எனவே, தங்களுக்கு உதவும் வகையில், வாகன வரிகளையும், சுங்க கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் அந்த அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வாகன காப்பீட்டுத்தொகை அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள BOCI அமைப்பு, பேருந்துகளுக்கு மட்டும் ஆண்டிற்கு 2 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத்தொகை செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், வாகனக் கடன்களுக்கான வட்டியை, 3 மாதங்களுக்கோ அல்லது 6 மாதங்களுக்கோ வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள இது சரியான நேரம் என தெரிவித்துள்ள இந்திய பேருந்து மற்றும் கார் ஓட்டுநர் கூட்டமைப்பு, தங்களின் நீண்ட கால கோரிக்கையான “ஒரே நாடு, ஒரே வரி, ஒரே அனுமதி” குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.