தெர்மாகோல் கொண்டு நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்படும் வீடு

செங்கல், ஜல்லி, கம்பி மற்றும் மணல் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் தெர்மாகோல் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் வீடு கட்டப்பட்டு வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவர் வீடியோ மற்றும் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். தனக்கு சொந்தமான இடத்தில் சுமார் 800 சதுர அடியில் கம்பி, செங்கல், ஜல்லி, மணல் ஏதுமின்றி நவீன தொழில்நுட்பத்துடன் தெர்மாகோல் வீடு ஒன்றை கட்டி வருகிறார் ராமர்.

தெர்மாகோல் மூலம் வீடு உருவாக்குவது குறித்து தான் ஆரம்பத்தில் நம்பவில்லை என்றாலும், அமெரிக்க தொழில்நுட்பத்தால் கட்டப்பட்ட தெர்மாகோல் வீடுகள் உறுதியுடன் இருப்பதை அறிந்து, வீட்டை உருவாக்க திட்டமிட்டதாக ராமர் கூறுகிறார்.

குறைவான விலையில் கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக கூறும் ராமர், நிலநடுக்கம் ஏற்பட்டாலும், இந்த வீட்டில் விரிசல் ஏற்படாது என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இந்த தொழில்நுட்பம் கொண்டு அமெரிக்காவில் அதிகளவில் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், இந்த நவீன முறையில் வீடு கட்டுவதால், காலநேரமும், பொருள் விரயமும் குறையும் என்றும் கட்டிடம் உறுதி மிக்கதாகவும், நீண்டகாலத்திற்கு உழைக்கும் என்றும் பொறியாளர் ஆனந்தகீதன் தெரிவித்தார்.

தெர்மாகோல் வீடுகள், கடற்கரை பகுதி, மலைப்பிரதேசங்களுக்கும் ஏற்றதாகவும், குறைந்த இடத்தில் மிகக் குறைந்த செலவில் வீடு கட்ட முடியும் என்றும் ஆனந்தகீதன் கூறுகிறார். மணல் மற்றும் செங்கல் தட்டுப்பட்டிற்கு இந்த நவீனதொழில்நுட்பம் மிகவும் ஏற்றதாகும் என்று பொறியாளர் ஆனந்தகீதன் கூறுகிறார்.

பள்ளி-கல்லூரி மாணவர்கள் தங்களது ப்ராஜக்ட் வேலைகளுக்கு மட்டுமே தெர்மாக்கோல் கொண்டு வீடுகள் கட்டி வந்த நிலையில், நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்களைத் தவிர்த்து நவீன தொழில் நுட்பத்துடன் வீடுகள் கட்டப்பட்டு வருவது சவாலுடன் கூடிய சாதனை என்றே கூற வேண்டும்.

Exit mobile version