2019ஆம் ஆண்டு, வரலாற்றின் மிகவும் வெப்பமான ஆண்டு என உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஐ.நா சபையின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பொதுவான வானிலை ஆய்வு அமைப்பாக, உலக வானிலை மையம் உள்ளது. இந்த அமைப்பு, புவி வெப்பமயமாதல் குறித்து தற்போது வெளியிட்டு உள்ள ஆய்வு முடிவுகள், உலக மக்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலக வானிலை மைய ஆய்வு முடிவுகளின் படி, உலகம் எந்திர மயமாக்கப்பட்ட காலம் தொடங்கி இதுவரையில், வரலாறு காணாத வெப்பம் பதிவாகி உள்ள ஆண்டாக, 2019ஆம் ஆண்டே உள்ளது. இந்த வெப்பத்தின் காரணமாக, பனிப் பாறைகள் உருகி, கடலின் நீர்மட்டமும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும், உலகெங்கும் சுமார் ஒரு கோடி மக்கள் பல்வேறு சூழலியல் பாதிப்புகளால் தங்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து உள்ளனர். இவர்களில் சுமார் 70 லட்சம் மக்கள், மழை, வெள்ளம், வறட்சி போன்ற
பேரிடர்களால் நேரடியான பாதிப்பை சந்தித்துள்ளனர். 2019ஆம் ஆண்டு நிறைவடையும் போது, இவ்வாண்டில் தங்கள் வாழிடங்களை விட்டு இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை, சுமார் 2 கோடியே 20 லட்சமாக இருக்கும் என அஞ்சப்படுகின்றது.
இவை தவிர, கடல் நீரில் நச்சு அமிலங்கள் கலக்கும் அளவு, கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடவும், தற்போது 25 சதவிகிதம் அதிகமாகி விட்டது. முன்னர், நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தோன்றிய அனல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள், தற்போது அடிக்கடி தோன்றுகின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சியும், கவலையும் அளிக்கக் கூடிய தகவல்களால் நிறைந்துள்ளது இந்த ஆய்வறிக்கை.
கடந்த 2010ஆம் ஆண்டு முதலே, ஒவ்வொரு ஆண்டும் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகின்றது. இதனால், கடந்த 2010 முதல் 2019 வரையிலான ஆண்டுகளை, ‘புவியின் அதி வெப்ப ஆண்டுகள்’ என்று ஐ.நா குறிப்பிடுகின்றது. இந்த வெப்ப அதிகரிப்பு இனியும் தொடர்ந்தால், இன்னும் சில பத்தாண்டுகளில், பூமி, மனிதர்கள் வாழ இயலாத இடமாகிவிடும் என்பதே, சூழலியலாளர்களின் எச்சரிக்கையாக உள்ளது.