வீரவணக்க நாளையொட்டி மொழி போராட்ட தியாகி ராஜேந்திரன் சிலைக்கு அதிமுக எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும், கடந்த 1965 ஆம் ஆண்டில் நடந்த போராட்டத்தில் ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளையொட்டி வீரவணக்க நாள் இன்று தமிழகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள தியாகி ராஜேந்திரன் சிலைக்கு எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், கடலூர் தொகுதி எம்.பி.யுமான அருண்மொழித் தேவன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில், சிதம்பரம் தொகுதி எம்.பி. சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சிதம்பரம் பாண்டியன், உட்பட 500 பேர் கலந்து கொண்டனர். சிதம்பரம் காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் அண்ணாமலை நகரை அடைந்தது. பின்னர், தியாகி ராஜேந்திரன் சிலைக்கு எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.