கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மேற்கு வங்க அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த, சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்றனர். அப்போது, அவர்களை தடுத்த காவல்துறையினர், அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தனர். இதனிடையே, சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கையை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, தர்ணா போராட்டத்தில் குதித்தார்.
விசாரணைக்கு காவல் ஆணையர் ஒத்துழைக்காததை அடுத்து, சிபிஐ உச்சநீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, ராஜீவ் குமார், விசாரணைக்கு, சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில், அவரை கைது செய்யாமல், விசாரணை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில், கொல்கத்தா மெட்ரோ ரயில் வளாகத்தில் நடைபெற்றுவரும் தர்ணா போராட்டத்தில், ராஜீவ் குமாரும் பங்கேற்றார்.
அவரின் இந்த செயல், இந்திய காவல்துறை விதிகளுக்கு எதிரானது என்று கூறி, ராஜீவ குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மேற்கு வங்க அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒருபுறம், மம்தா பானர்ஜி போராட்டம் நடத்திவரும் நிலையில், உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு, காவல் ஆணையருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.