நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் மூன்றாம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், 17-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் அதிகளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகளும், ஓட்டுநருடன் சேர்த்து 3 பேருடன் டாக்சிகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் ஒரு பயணியுடன் டாக்சி போக்குவரத்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிவப்பு மண்டலத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் கட்டுமான மற்றும் தொழிற்சாலை பணிகள் வழக்கம் போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எந்த காரணம் கொண்டும் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் 100 நாள் வேலை திட்ட பணிகளுக்கும் நாடு முழுவதும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணி வரை அத்தியாவசியம் இல்லாத அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவ தேவையின்றி கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் பொதுமக்கள் கூட்டமாக கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version