திரைத்துறைக்கு வரும் எண்ணம் ஒருபோதும் இருந்தது இல்லை அவருக்கு. நன்றாகப் படித்து வழக்கறிஞராகவோ, இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகவோ வர வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. ஆனால் திரைத்துறையில் உள்ளவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டதால்தான் அவர் நடிக்க நேர்ந்தது. அப்படியாகத் தனக்கு விருப்பம் இல்லாத ஒரு துறைக்கு வந்தாலும், அதிலும் பல வியத்தகு சாதனைகளை செய்தவர் அவர்.
1964-ம் ஆண்டில் தமிழில் வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான பின்னர், அடுத்த ஓராண்டுக்குள் 23 படங்களில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது அந்தக் காலத்தில் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத சாதனை.
அப்படியாக ஒப்புக் கொண்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவர் வெற்றிவிழா நாயகியாகக் கொண்டாடப்பட்டார். இதனால் இந்தியத் திரைத்துறையிலேயே மிக அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற சாதனையும் அவருக்கு சொந்தமானது.
அம்மா அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் 28 படங்களிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 17 படங்களிலும் நடித்தார். இப்படியாக தமிழகத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களின் படங்களை மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டார்.
தெலுங்கிலும் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகிய உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பெரும்பங்காற்றினார். தெலுங்கில் நடித்த மொத்தப் படங்கள் 29, அதில் வெற்றிபடங்கள் 28, அவற்றில் என்.டி.ராமராவுடன் நடித்த படங்கள் மொத்தம் 12.
1966-ம் ஆண்டில் 16 படங்கள், 1968-ம் ஆண்டில் மட்டும் 21 படங்கள் என அவர் திரைத்துறையில் அசுர உழைப்பைச் செலுத்தினார். அம்மா அவர்கள் நடித்தவற்றில் 77 திரைப்படங்கள் 100 நாள்களுக்கும் மேல் ஓடியவை. 18 திரைப்படங்கள் தொடர்ந்து 25 வாரங்களுக்கும் மேல் ஓடிய சாதனைக்கு உரியவை.
அதிலும் தமிழ்த் திரையுலகில் அவரது சாதனை மிகப் பெரியது, கதாநாயகியாக நடித்த 89 தமிழ்த் திரைப்படங்களில் 85 திரைப்படங்கள் வெள்ளி விழாக் கொண்டாடிய வெற்றிப்படங்களாக அமைந்தன. இதனால் இன்றைக்கும் தமிழ்த் திரையுலகின் மிக வெற்றிகரமான கதாநாயகி என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான்.