2019ல் அதிக வசூல் கொடுத்த தமிழ்ப் படங்கள் – சிறப்பு தொகுப்பு

2019ம் ஆண்டு முடியும் தருவாயில் அனைத்து துறைகளிலும் ஏற்றம், இறக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் படங்களும் வெளியாகி வசூலை குவித்தன.

பேட்ட:

நாம் திரையில் விண்டேஜ் ரஜினியை தான் எதிர்பார்க்கிறோம் என்பதை நன்கு உணர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் “பேட்ட”. கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட உலகளவில் ரூ.250 கோடிக்கும் மேல் அதிக வசூலை பெற்றது.

விஸ்வாசம்:

பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் களமிறங்கிய ‘விஸ்வாசம்’, அஜித்-சிவா கூட்டணியில் உருவான 4வது திரைப்படம். நீண்ட நாட்களுக்கு பிறகு பேமிலி ஆடியன்ஸை கவர்ந்த அஜித் படமாக விஸ்வாசம் அமைந்தது. தமிழ்நாட்டில் ரஜினி படத்தை விட அதிகமாக வசூல் செய்தது.

காஞ்சனா-3:

அதே பேய் பழிவாங்கும் கதை என வழக்கமான கதையுடன் வெளியான இப்படம் முந்தைய படங்களை விட அதிக வரவேற்பு பெறாவிட்டாலும்  வசூலில் சாதனைப் படைத்தது.

நேர்கொண்ட பார்வை:

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கிறார் என்றதும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தமிழுக்காக சில மாற்றங்களுடன் வினோத் இப்படத்தை இயக்கினார். வித்யாபாலன் அறிமுகம், சமூகத்தின் நடப்புகளை சொல்லிய படம் என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் சாதனை படைத்தது.

அசுரன்:

வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவான 4 வது படத்தில் மஞ்சுவாரியர், கென் கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது.

கோமாளி:

நீண்ட நாளுக்கு பிறகு ஜெயம் ரவிக்கு பெரும் வெற்றியை கொடுத்த இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். 90’s vs 2K கிட்ஸ்களின் வேறுபாட்டை காட்டிய இப்படத்தின் கதைக்களம் 90 களில் பிறந்தவர்களால் தியேட்டர்களில்  கொண்டாடப்பட்டது.

நம்ம வீட்டுப்பிள்ளை:

‘மிஸ்டர்.லோக்கல்’ பட தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயன் எதிர்பார்த்த வெற்றியை இப்படம் கொடுத்தது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேலும், தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடித்தனர். அண்ணன்-தங்கை பாசம் தமிழக குடும்பத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கைதி:

விஜய்யின் பிகில் படத்துடன்  வெளியான இப்படத்தில் ஹீரோயின், பாடல்கள் கிடையாது. நேர்த்தியான திரைக்கதையால் வெற்றி பெற்ற இப்படம் கார்த்தியின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி வசூலித்த முதல் படமாக அமைந்தது.

பிகில்:

மூன்றாவது முறையாக அட்லியுடன் கூட்டணி அமைத்த நடிகர் விஜய்யின் பிகில் தான் 2019ன் டாப் மோஸ்ட் வசூல் சாதனை செய்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்து விஜய்க்கு கேரியரில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது.

காப்பான்:

நடிகர் சூர்யா- கே.வி. ஆனந்த் கூட்டணியின் மூன்றாவது படம் ‘காப்பான்’. படம் ஹிட் ஆகவில்லை என்றாலும் வசூலில் சாதனைப்படைத்தது.

Exit mobile version