முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு இடைவெளியை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென தலைமை செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், சுகாதாரத்துறையின் சீரிய முயற்சியால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்கள் முகக் கவசம் அணிவதையும், பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிப்பதையும் கண்டிப்புடன் கண்காணிக்க வேண்டும் என தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருமண மண்டபங்கள், மால்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்த வேண்டும் எனவும், பொது இடங்களில் மக்கள் முகக் கவசமின்றி செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரிசோதனைகளை எக்காரணம் கொண்டு மாவட்ட நிர்வாகம் குறைக்கக் கூடாது எனவும், தொற்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் சண்முகம் அந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.