மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு உருவாக்கி உள்ள கல்வித் தொலைக்காட்சியை கைபேசியிலும் கண்டு பயன்பெறலாம். கல்வித் தொலைக்காட்சியின் கைபேசி செயலி – குறித்து பார்ப்போம்…
மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள மிகப் பெரிய முயற்சியே கல்வித் தொலைக்காட்சி ஆகும். கல்வி நிகழ்ச்சிகளுக்காக என்று மட்டும் ஒரு தொலைக்காட்சியை தொடங்கும் திட்டம் கடந்த ஜனவரியில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. கல்விக்காக தொடங்கப்படும் முதல் தனித் தொலைக்காட்சியான இதற்கென அலுவலர்களும், நிதியும் ஒதுக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சிகள் தற்போது படப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. புதியக் கல்வித் திட்டத்தை மாணவர்களிடம் எளிதாக கொண்டு செல்வது இந்தத் தொலைக்காட்சியின் முதன்மை இலக்காக உள்ளது. பொதுத் தேர்வுகளை எழுத உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்தத் தொலைக்காட்சியின் பிரதான பார்வையாளர்களாக உள்ளனர். விரைவில் இந்தத் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது.
இந்தக் கல்வித் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்புகள் குறித்து பள்ளிகளில் பின்னூட்டங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த செயல்முறையைக் கண்காணிக்க மாவட்டம் தோறும் ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறாக கல்வித் தொலைக்காட்சியின் சேவை மாணவர்களின் வீடுகளை சென்றடைய தமிழக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தொலைக்காட்சிப் பெட்டிகளையும் தாண்டி கல்வித் தொலைக்காட்சியின் சேவையை விரிவுபடுத்தும் முயற்சியாக கல்வித் தொலைக்காட்சியின் கைபேசி செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது – என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயலியின் மூலம் ஆண்ட்ராய்டு கைபேசிகள் மற்றும் ஐ.ஓ.எஸ். கைபேசிகள் அனைத்திலும் கல்வித் தொலைக்காட்சியைப் பார்க்க இயலும். கல்வித் தொலைக்காட்சியின் சேவை அறிமுகமாகும் அதே நாளில் இந்தக் கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களைத் தாண்டி மருத்துவக் குறிப்புகள், திருக்குறள் விளக்கம் ஆகியவையும் இடம்பெற உள்ளது. கலை, பண்பாடு, வரலாறு – ஆகிய துறைகளில் மாணவர்களின் ஆய்வு மனப்பான்மையை வளர்க்கும் நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற உள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மாணவர்களையும் தாண்டி மக்களிடம் வரவேற்பைப் பெற வாய்ப்புகள் உள்ளன. கற்றலில் இனிமையையும், தொழில்நுட்பத்தில் எளிமையையும் வெளிப்படுத்தும் கல்வித் தொலைக்காட்சியை மாணவர்களோடு பெற்றோர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.