விவசாயத்திற்கு அடுத்தபடியாக, பழமையும், பெருமையும் வாய்ந்தது, கைத்தறித் தொழில். மனித நாகரீத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்திய கைத்தறித் தொழில், தமிழகத்தில் சீரும் சிறப்புடனும் திகழ்ந்தது ஒருகாலம். ஆனால், விசைத்தறி வருகைக்குப்பிறகு, கைத்தறித் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஒரு காலத்தில், ஈரோடு மாவட்டம், சென்னிமலைக்குள் நுழைந்தாலே, கைத்தறிகளின் ஓசை காதில் விழுந்துகொண்டே இருந்த நிலை இருந்தது. ஆனால், விசைத்தறிகள் வருகைக்குப் பிறகு, கைத்தறி ரகங்களுக்கான வரவேற்பு குறைந்தது. கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட துணி மற்றும் ஜவுளி ரகங்கள் தேங்கும் நிலை ஏற்பட்டது. அதனால், கைத்தறித் தொழில்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறையத் தொடங்கி, கைத்தறிகளும் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வந்தன.
அதனால், தமிழகம் முழுவதும் உள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான கைத்தறித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இப்படி அடிமேல் அடிவாங்கிக் கொண்டிருந்த கைத்தறித் தொழிலும், அந்தத் தொழிலாளர்களும், கொரோனா பரவலால் இன்னும் கூடுதல் துயரத்திற்கு ஆளாகினர்.
இதையடுத்து, அமைப்பு சாரா தொழிலுக்கு வழங்கப்பட்டதைப் போல, தங்களுக்கும் இடைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும், நூல் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஆண்டுதோறும் முறையாக கூலியை உயர்த்த வேண்டும், ஆண்டு முழுவதும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்களை உறுதி செய்ய வேண்டும், அரசு வழங்க வேண்டிய மானியத்தை வழங்கி, கூட்டுறவு நெசவாளர்கள் மற்றும் சங்கங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கைத்தறித் தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் வைத்துள்ளனர்.