அமெரிக்காவின் விர்ஜினியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் பல்வேறு காரணங்களுக்காக சக குடிமக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அங்குள்ள மக்கள் துப்பாக்கிகளை வைத்திருக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும்பாலானவர்கள் நவீன துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இதனால் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள விர்ஜினியா மாகாணத்தில் உள்ள விர்ஜினியா கடற்கரையின் அருகே உள்ள ஒரு வளாகத்தில் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார்.
திடீரென நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டால், அங்கிருந்த மக்கள், அச்சத்துடன் அங்கும் இங்கும் ஓடினர். ஆயினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுட்டுக் கொன்றனர். அவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.