மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே, நள்ளிரவில் பிரசவவலியால் துடித்த பசு மாடுக்கு காவலர்களும் பொதுமக்களும் இணைந்து பிரவசம் பார்த்த நிகழ்வு மனிதாபிமானத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கருவுற்ற பசு மாட்டின் உரிமையாளர் பசுவினை சரியாக பார்த்துக் கொள்ளாததால் உணவு இன்றி தவித்த பசு, நேற்று மாலை திடீரென மயக்கம் அடைந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் பசுவிற்கு உணவு அளித்தனர். இரவு 11 மணிக்கு மேல் பசு கன்றை ஈணும் நிலைக்கு வந்தது.
அப்போது அங்கு இரவு ரோந்திற்கு வந்த காவலர்கள் இருவர், பொது மக்களோடு இணைந்து பசுவைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர். அந்த நள்ளிரவு நேரத்திலும், பசுவுக்காக காவலர்கள் வைக்கோல் தேடி அலைந்து, பின்னர் கண்டுபிடித்துக் கொண்டுவந்தனர். கடைசியாக அந்த பசு நள்ளிரவில் கன்றை ஈண்டது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரத்துடன் கன்றை வரவேற்றனர்.
பின் ப்ளூ கிராஸ்-க்கு போன் செய்து பசுவினையும், கன்றையும் பொதுமக்களும், காவலரும் ஒப்படைத்தனர். நள்ளிரவு 1 மணி வரையும் கருவுற்ற பசுவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட காவலரும் பொதுமக்களும் இன்னும் இந்த உலகில் மனிதாபிமானம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என நிரூபித்துள்ளனர்.