சென்னையில் கொரோனா நோயாளிகளின் சடலத்தை எரியூட்டுவதற்காக மயானத்தில் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கும் அவலம் நிலவுகிறது.
இறந்தவர்களின் உடலுடன் காத்துக்கிடப்பது உறவினர்களை விரக்தியின் விளிம்பிற்கே தள்ளியுள்ளது.
தமிழ்நாட்டில் கோரமுகத்தை காட்டியுள்ள கொரோனாவால் நாள்தோறும் உயிர் பலி அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ஒரு புறம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் உயிர் பறிபோகும் நிலையில், மறுபுறமோ கொரோனாவால் பலியானோரின் சடலத்தை எரியூட்டவே,இடமில்லாமல் பொதுமக்கள் திண்டாடி வருவது வேதனையின் உச்சக்கட்டம்.
சென்னை அம்பத்தூரில் உள்ள இடுகாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் சடலத்துடன் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன.
ஒரு உடலை எரியூட்ட 2 முதல் 3 மணி நேரம் ஆவதால், பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக்கிடக்கும் அவல நிலையை கண்கூடாக பார்க்க முடிகிறது.
இதனால் வேதனையடைந்துள்ள பொதுமக்கள், இடுகாட்டிலாவது கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
உறவுகளை தொலைத்து ஓயாத வலியில் துடிக்கும் பொதுமக்கள், இறுதிசடங்கைக் கூட போராடி நடத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை.