ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதுகுறித்த ஒரு சிறப்பு தொகுப்பு.
இருதயம் மனித உறுப்புகளில் மகத்தான ஒரு உறுப்பாக பணியாற்றி வருகிறது. அதன் பணியை அவ்வளவு எளிதில் விளக்கிவிட முடியாது. காரணம், சோர்வு நிலை ஏற்பட்டதும் நாம்கூட சற்று உறங்கிவிடுகிறோம். ஆனால் நம் இதயம் எப்போழுதும் துடித்துகொண்டே இருக்கும்.
24 மணி நேரமும் நமக்காக அயராது உழைக்கும் இதயத்தின் அரோக்கயத்தினை பற்றி நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. அரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிடுகிறோம், தேவையற்ற பாரங்களை மனதில் ஏற்றிக்கொண்டு, இருதய நோய்க்கு ஆளாகிறோம்,பிறகு மாரடைப்பு ஏற்படும்போது மட்டுமே அதைப்பற்றி கவலைப்படுகிறோம்.
இதயத்தைப் பாதுகாக்கவும், இதயநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செப்டம்பர் 29ம் தேதி உலக இருதய தினமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நாளின் நோக்கம், இருதயத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் அதிகம் என்று, உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.
ஆண்டுதோறும், 1 கோடியே 73 லட்சம் பேர் இருதய நோயால் இறக்கின்றனர். இளம் வயதில் ஏற்படும் இருதய நோய்களுக்கு, புகைப் பழக்கம், கட்டுப்பாடில்லாத மதுப் பழக்கம், கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுதல், அளவுக்கு அதிகமான உடல் எடை, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
உலகில், இருத நோயால் ஏற்படும் மரணங்கள், 13 சதவீதம் ரத்த அழுத்தத்தாலும், 9 சதவீதம் புகைப்பழக்கத்தாலும், 6 சதவீதம் நீரிழிவு மற்றும் உடற்பயிற்சியின்மையாலும், 5 சதவீத மரணம் அதிக உடல் எடையாலும் ஏற்படுகிறது. எனவே இருதய நோய்களிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான வாழ்வு வாழ, தீய பழக்கங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது அவசியமாகும்.
வயிறு முட்ட சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தினமும் வயிறு குலுங்க சிரியுங்கள், பிறரையும் மகிழ்வித்து நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள். இதயத்தை பாதுகாப்போம் என, இந்த உலக இதய தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.