மரணத்தை வென்ற மகத்தான மனுஷி வைரம்

இடுகாடு என்றால் யாராக இருந்தாலும் பயம் கவ்வி கொள்ளும் . அந்த சூழ்நிலையில் குழந்தைகளின் கல்விக்காக தனி பெண்ணாக நின்று இடுகாட்டில் வெட்டியான் வேலை பார்க்கும் மகத்தான மனுஷி வைரம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

இப்படி பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு பெண்கள் விண்ணை தாண்டி சாதனை படைத்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் சத்தம் இல்லாமல் சாதனை படைக்கும் பெண்களும் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் கோவை சொக்கட்டாம்பாளையத்தைச் சேர்ந்த பெண் வெட்டியான் வைரம்.

வைரத்திற்கு 19 வயதாக இருக்கும் போது வெட்டியான் தொழில் செய்து வந்த தாய் இறந்துவிட, அத்தொழிலை ஏற்று நடத்த யாரும் முன்வரவில்லை. இச்சூழ்நிலையில் குடும்ப வறுமை ஒருபுறம் வதைக்க வேறுவழியின்றி வெட்டியான் தொழிலை நடத்த தனி பெண்ணாக முன்வந்தார் வைரம். கடந்த 25 வருடங்களாக வெட்டியான் தொழிலை எவ்வித பிழையும் இன்றி செய்து வருகிறார். தற்போது மூன்று குழந்தைகளின் படிப்பிற்கும் வெட்டியான் தொழில் செய்து கிடைக்கும் பணம் தான் உதவுவதாக பெருமிதத்துடன் கூறுகிறார் வைரம்.

இதுமட்டுமின்றி இறந்தவர்களின் பிரிவில் வாடும் உறவினர்களிடம் வாதம் செய்வது தவறு என்று கருதும் வைரம், கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்கிறார். அதேபோல் அனாதை பிணங்களுக்கு உறவாய் நின்று எவ்வித எதிர்பார்ப்புமின்றி அனைத்து இறுதி காரியங்களையும் செய்து புதைக்கும் வைரம் மனிதருள் மாணிக்கமாக உயர்ந்து விட்டார்.

நாள் முழுவதும் பிணங்களை பார்த்தாலும் சஞ்சரிக்காத அவரது மனது. இறந்த குழந்தையை பார்க்கும் போது தன்னையறிமால் துயரம் கவ்வும் என்று கூறுகிறார், தழுதழுக்கும் குரலில். பல மரணங்களை கண்டாலும் அவரிடம் கருணை இன்னும் மரணிக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக உள்ளது ..

Exit mobile version