எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு. கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். பண்டைக் காலத்தில் சிறப்புற்று விளங்கிய எகிப்தின் பழங்காலத்து மன்னர்களால் கட்டப்பட்ட பிரமிடுகள் உலகப்புகழ் பெற்றவை. எகிப்தில் உள்ள நினைவுச் சின்னங்களான கிசா பிரமிடுத், பெரிய இசுஃபிங்சு என்பன பண்டை எகிப்து நாகரிகக் காலத்தைச் சேர்ந்தவை.
இதுவரை பல கல்லறைகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் எகிப்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளிலேயே, மிகப் பழைமையானதாக கருதப்படும் சுமார் 4,400 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட, மதகுரு ஒருவரின் கல்லறை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பல சகாப்தங்கள் கடந்த இந்த கல்லறையில் அகழ்வாராய்ச்சியாளர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
‘வாய்த்தே’ எனும் கண்டுபிடிக்கப்பட்ட அந்த மதகுருவின் கல்லறையில் அவரது தாய், மனைவி மற்றும் பிற உறவினர்களும் புதைக்கப்பட்டுள்ளனர். அழகிய பழங்கால ஓவியங்களும், பாரோ மன்னர்களின் சிலையும் அந்த மிகப்பெரிய கல்லறையின் உட்புறத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
மேலும் பல கண்டுபிடிப்புகள் பற்றிய ஆய்வுகள் வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், பிரதான கல்லறையின் உரிமையாளர் சர்கோஃபேகஸ் உட்பட பலரின் கல்லறைகள் அதன் உள்ளே இருக்கின்றன.