ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாக கூறியுள்ளார்.
வாழ்நாள் சிறைதண்டனை கைதிகள் கூட நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் 28 ஆண்டுகள் முழுமையாக சிறை தண்டனையை அனுபவித்து முடித்த பிறகும், சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டதாகவும், ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பு காரணமான அது கைகூடவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஒட்டுமொத்த தமிழகமும் அவர்களின் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்பதாகவும், ஆகவே ஆளூநர் அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.