ஆட்சேபனை இல்லாத இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா வழங்க அரசாணை

ஆட்சேபகரமற்ற குடியிருப்புகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்தால் பட்டா வழங்கலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஜூலை மாதம் ஆட்சேபகரமற்ற நிலங்களில் உள்ள குடியிருப்புகளை நெறிமுறைப்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் தற்போது புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி அனைத்து விதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை தவிர்த்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்த   நபர்களுக்கு பட்டா வழங்கப்படும்.

ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ஈட்டும் குடும்பங்களுக்கு இந்த பட்டா வழங்கப்படும். ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 66 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு நிலங்களில் குடியிருந்து வருகின்றனர்.ஊரக பகுதிகளில் 4 சென்ட் அளவிலும், நகர பகுதிகளில் இரண்டரை சென்ட் அளவிலும் மாநகராட்சி பகுதிகளில் 2 சென்ட் அளவிலும் பட்டா வழங்கப்படும்.

ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலான குழு சரிபார்த்த பின்னர் பட்டா வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version