கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பு, படுக்கைகள் பற்றாக்குறை குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இரண்டாவது அலையின் போது செய்யப்பட்ட மருத்துவ கட்டமைப்பு வசதிகளை அப்புறப்படுத்த கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டனர்.
தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கி, முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்த வேண்டுமென கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.