ஏறு முகத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பை, வீறு கொண்டு கட்டுபடுத்தி வருகிறது தமிழக அரசு.
பரவலாக்கப்படும் படுக்கை வசதி, தடையில்லாது கிடைக்கும் தடுப்பூசி, அதிகரிக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி என, கொரோனாவிற்கு எதிரான போரில், முன் வரிசையில் நின்று களமாடி வருகிறது தமிழ்நாடு எனும் தனி மாநிலம்.
இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் கொரோனாவின் கொடூரத்தால் நிலைகுலைந்து நிற்கையில், தமிழ்நாட்டில் நிலவும் சூழல், தரணியை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.
ஆக்ஸிஜன் சிலிண்டரை வீதியில் உருட்டிச் செல்லும் மத்திய பிரதேசம், கணவனுக்கு தன் உயிர் காற்றை கொடுத்து காப்பாற்ற போராடும் உத்திர பிரதேசம், மயானங்கள் நிரம்பி வழியும் டெல்லி என, மற்ற மாநிலங்களின் அவல நிலையை ஒப்பிட்டுப் பார்க்கையில், தமிழ்நாட்டின் நிர்வாகத் திறன் நமக்கு புரிய வரும்.
தமிழகத்தில், ஒரு நாளைக்கு தோரயமாக 15 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
இருப்பினும், அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து, சிகிச்சை கிடைக்க அரசு வழி செய்கிறது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுக்கா அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 138 மருத்துவமனைகளில், கூடுதலாக 12,370 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 550,
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500,
எழும்பூர் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துத்துவமனைகளில் 225,
கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்டியூட்டில் 200
மற்றும் சென்னையில் உள்ள மற்ற 11 மருத்துவமனைகளில் ஆயிரத்து 420 கூடுதல் ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் வெகு விரைவாக நடைபெற்று
வருகிறது.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், கூடுதலாக 434 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும்,
திருச்சி மாவட்டத்தில் 585,
தஞ்சாவூர் மாவட்டத்தில் 583,
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 311,
மதுரை மாவட்டத்தில் 225
மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் 325
மற்றும் பிற மாவட்டங்களில் கூடுதலாக 7 ஆயிரத்து 12 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் தயாராகி வருகின்றன.
வட மாநிலங்களில் அதிகரிக்கும் மரணங்களுக்கு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையும், படுக்கை பற்றாக்குறையுமே முக்கிய காரணங்களாக உள்ள நிலையில், தமிழகம் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ம் உயிர்பலி இன்றி, கொரோனாவிற்கு எதிரான போரில் நாம் வெல்ல வழி வகுக்கும்.