கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவக் குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், தொற்று ஆளானவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்றும், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 196 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் 20 ஆயிரம் பணியாளர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ததாகவும், சென்னையில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களில் 14 லட்சத்து 50 ஆயிரம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறினார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவ, தனி பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும், ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நபர் ஒருவருக்கு 2 முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றியே தமிழக அரசு செயல்படுகிறது என்றும், மருத்துவர்களின் ஆலோசனையை கடைபிடித்ததால் நோய் தொற்று குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருவதாக தெரிவித்த அவர், பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாடு முழுவதும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.