கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு

அரக்கோணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரக்கோணம் நகராட்சியில் இருக்கும் நேருஜி நகர் மயானத்தில் தான் இந்த அவல நிலை. இங்கு கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

இதையடுத்து நகராட்சி அலுவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது, மயானத்தின் பின்புறம் இருந்த குப்பையில் பிளஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு 5 உடல்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விசாரணையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்யாமல் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி, குப்பையில் வீசிவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்கள் யார், இந்த உடல்களை வீசிவிட்டு சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ முடியாத அவல நிலையில் தான் தமிழக அரசின் நிர்வாகம் உள்ளது.

அரக்கோணம், நேருஜி நகர் சுடுகாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்டு இருப்பது அரசின் இயலா நிலையை காட்டுகிறது.

இது குறித்து நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியானவுடன் அவசர அவசரமாக வந்த நகராட்சி அதிகாரிகள் சடலங்களை குழி தோண்டி புதைத்துள்ளனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத தமிழக அரசு தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version