குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வருகிற 26ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசுத் தின விழா அணிவகுப்பில் இடம்பெறவிருந்த தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது.
தென் இந்தியாவில் கர்நாடகாவை தவிர்த்து அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நான்காவது சுற்று வரை போயிருந்த நிலையில், மத்திய அரசின் நிபுணர்கள் குழு திடீரென அனுமதியை ரத்து செய்தது.
இது தமிழ்நாட்டு மக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசின் ஊர்தியை அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில், நேரக் கட்டுப்பாடு காரணமாக 56 விண்ணப்பங்களில் 21 மட்டுமே விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும்,
தமிழ்நாடு உள்பட 12 மாநில அலங்கார ஊர்திகளுக்கான விண்ணப்பங்கள் உரிய விவாதங்களுக்கு பின்னரே நிராகரிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில், குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியை அனுமதிக்க முடியாது என்றும் இதற்கான காரணம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் மட்டுமே குடியரசு தின விழாவுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.