மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியை கைவிட அரசு முடிவு?

மேகாலயாவின் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியை கைவிட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தின் லும்தாரி கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 13ம் தேதி தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்பொழுது அருகில் இருந்த லிட்டின் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுரங்கத்தில் தண்ணீர் புகுந்தது. இதில் சுரங்கத்திற்குள் இருந்த 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கும்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டனர். ஏறத்தாழ ஒருமாத காலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும்நிலையில், இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியை நிறுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிபுணர்களின் உதவி பெற்று மீட்புப் பணிகளை தொடர உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், மீட்புப் பணி மிகவும் சவாலாக உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் கோனர்டு சங்மா தெரிவித்துள்ளார்.

Exit mobile version