நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக தனித்து போட்டியிட்டது.
இடைத்தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் 2 மக்களவைத் தொகுதிகளிலும், 2 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி வெற்றி பெற்றது. ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது.
மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது என்றும் தங்கள் எம்.எல்.ஏக்களிடம் பாஜக நடத்திய பேரம், பலிக்கவில்லை என்றும் முதலமைச்சர் குமாரசாமி கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளிலும் வெல்வதே இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக 25 கோடியிலிருந்து 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும், ஆனால் யாரும் அவர்கள் பக்கம் செல்லவில்லை எனவும் முதலமைச்சர் குமாரசாமி கூறினார்.