தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அரசு ஆலோசகர் சண்முகம், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேலும், தற்போது மார்ச் மாதம் முதல் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், இந்தியாவிலேயே அதிகளவில் RT-PCR பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்தார்.
மக்கள் அனைவரும், அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.தமிழ்நாட்டில் ஒருவர் கூட கொரோனா தொற்றால் உயிரிழக்கக் கூடாது, அனைவரும் காப்பாற்றப்படவேண்டும் என்பதன் அடிப்படையில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் கூறினார்.தமிழ்நாட்டில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.தொழிற்சாலைகள், உணவுக்கூடங்கள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் உள்ள நிறுவன உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யுமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.