புதுச்சேரியில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை, மர்ம கும்பல் ஒன்று, வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் பிரமுகர் ஜோசப், கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் காலாப்பட்டை சேர்ந்த சந்திரசேகர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறையிலிருந்த சந்திரசேகர் சில மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் இன்று காலை காலாப்பட்டை அடுத்த கனகசெட்டிகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சந்திரசேகரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, அவர் மீது வெடிகுண்டு வீசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. கொலை சம்பவம் குறித்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலைக்கு பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.