மதுரை மாவட்டம் மேலூர் அருகே இரவில் சாலையில் செல்வோரை பட்டாகத்திகளுடன் மிரட்டிய மர்மகும்பலை பொதுமக்களே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலூர் அருகே இடையபட்டியில் நள்ளிரவில் பட்டாகத்திகளுடன் ஒரு கும்பல் சாலையில் செல்வோரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்து வருவதாக தகவல் பரவியது.
இதையடுத்து, இடையப்பட்டி, ஆமூர் கிராம இளைஞர்கள் ஒன்று திரண்டு சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது. கிராம மக்களை கண்ட மர்மநபர்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் ஓடி ஒளிந்து கொண்டனர். பட்டாக்கத்தியுடன் பதுங்கியிருந்த 4 பேரை கையும் களவுமாக பிடித்து கிராம இளைஞர்கள், ஒத்தக்கடை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் மதுரை மற்றும் மேலூர் பகுதியை சேர்ந்த விஜய், வினித்குமார், யோகேஸ், பிரேம்குமார் என தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கொள்ளையர்கள் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.