அரை இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிப்பு

உலககோப்பை கிரிக்கெட் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடி வந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது

12 வது உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில், டாசில் வென்று பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் குப்டில் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் களமிறங்கினர். இந்திய அணியின் பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் முதல் இரண்டு ஓவர்களை வீசினர். இதில் முதல் இரண்டு ஓவர்களிலும் நியூசிலாந்து அணி ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது. மூன்றாவது ஓவரில் 1 ரன்னை மட்டும் எடுத்த நியூசிலாந்து அணி, 4 ஆவது ஓவரில் துவக்க ஆட்டக்காரர் மார்டின் கப்டில்லின் விக்கெட்டையும் இழந்து திணறியது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். ஓரளவு நிதானமாக விளையாடி வந்த மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஹென்றி நிக்கோலஸ் 28 ரன்களை எடுத்திருந்த போது ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போல்டானார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரை சதமடித்திருந்த நிலையில், 67 ரன்களை எடுத்திருந்த போது சாஹல் பந்து வீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்த ராஸ் டெய்லர் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார். இதனையடுத்து களமிறங்கிய மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்த நிலையில் 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

Exit mobile version