அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு இணையான முக்கியத்துவத்தை, கலைப் படிப்புகளுக்கும் அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார்.
இந்தியத் தொழில்துறை மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற 15வது உயர்கல்வி மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். இந்த மாநாட்டில் 65-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளைய உலகம் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றால் ஆளப்படும் என்றார். உயர்கல்விக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்களைப் புகுத்த வேண்டியது அவசியம் என்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். புதுமையான எண்ணங்களை ஊக்குவித்தல், ஆராய்ச்சிக்கு முன்னுரிமை, அவற்றுக்குரிய ஆதரவு ஆகியவை பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.