தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு: சொந்த ஊர்களில் ராணுவ வீரர்களுக்கு இறுதிச்சடங்கு

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இறுதிச்சடங்கு அவர்களின் சொந்த ஊர்களில் நடத்தப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நேற்று முன்தினம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரின் புத்காமில் உயிரிழந்த வீரர்களுக்கு ராணுவத்தின் சார்பில் இறுதி மரியாதை நடத்தப்பட்டு, வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இறுதி சடங்குகளில் திரளான மக்கள் கலந்து கொண்டு வீரர்களின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வாரணாசியை சேர்ந்த வீரரின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. ஏராளமான மக்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த உத்தராகண்ட் மாநிலம் டெஹ்ராடூனை சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரது சொந்த ஊரில் இறுதி மரியாதை செலுத்தினர். வீரரின் உடலுக்கு ராணுவம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

தாக்குதலில் உயிரிழந்த ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஷாபுரா கிராமத்தை சேர்ந்த வீரரின் உடலும் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு, அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. இதையொட்டி ஷாபுராவில் இளைஞர்கள் இருசக்கர வாகன ஊர்வலத்திலும் ஈடுபட்டனர்.

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த பீகாரின் பாட்னாவை சேர்ந்த வீரருக்கும் ராணுவத்தினர் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பொதுமக்களும் திரளாக அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version