அரக்கோணம் அருகே சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால், அந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத்தில் சரக்கு ரயிலில் அதிகாலையில் கூடுதலாக சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டன. அப்போது முக்கிய இரும்புப் பாதையில் இருந்து பிரிந்து செல்லும் போது, ரயில் இன்ஜினில் இருந்து 5-வது மற்றும் 6-வது பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி தடம் புரண்டன. தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், தடம்பு ரண்ட ரயில் பெட்டிகளை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக காட்பாடியில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை வரும் பழனி விரைவு ரயில், பெங்களூர் மெயில், மேட்டுப்பாளையம் விரைவு ரயில், ஆலப்புழா விரைவு ரயில், உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. சரக்கு ரயில் பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டதும், 90 நிமிடங்கள் தாமதமாக அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.