ரகசியமாக குழந்தைகளை பெற்றெடுத்த விக்கிலீக்ஸின் நிறுவனர் ; சாத்தியமானது எப்படி?

ஜூலியன் அசாஞ்சே, ஈகுவடார் தூதரகத்தில் ரகசியமாக குடும்ப வாழ்க்கை நடத்தி, 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். இது எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு, அனைவரையும் அலற விட்டவர் ஜூலியன் அசாஞ்சே. போர்க்குற்றங்கள், சதித்திட்டங்கள், மனித உரிமை மீறல்கள், முறைகேடுகள், ஊழல்கள் உள்ளிட்டவை தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை, தனது விக்கிலீக்ஸ் நிறுவனம் மூலம் தைரியமாக அவர் வெளியிட்டார். அசாஞ்சே வெளியிட்ட ஆவணங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, ஜூலியன் அசாஞ்சே மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலியன் அசாஞ்சே தஞ்சமடைந்தார். கடந்தாண்டு ஈக்வடார் அரசு தனது ஆதரவை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, அசாஞ்சே கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்தபோது, அவரும் அவரது காதலியும் மிக ரகசியமாக 2 குழந்தைகளை பெற்றெடுத்தது அண்மையில் தெரியவந்தது. இது எவ்வாறு சாத்தியம் என அனைவரும் ஆச்சரியமடைந்துள்ள நிலையில், அது குறித்த தகவல்கள் தற்போது முழுமையாக வெளியாகியுள்ளன. ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சமடைந்திருந்தபோது, தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஸ்டெல்லா மோரீஸ் என்ற பெண் வழக்கறிஞர் அவருக்காக வாதாடி வந்தார். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் நெருங்கி பழகவும் தொடங்கியுள்ளன. அசாஞ்சேவின் படுக்கை அறையிலும், அலுவலக அறையில் சிசிடிவி கேமராக்கள் கிடையாது. அவரின் பேச்சை ஒட்டுக்கேட்க மைக்ரோஃபோன்கள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஸ்டெல்லா மோரீஸ் கருவுற்றார். ஆனால், அறையில் மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ளதால், தான் கருவுற்றுள்ள தகவலை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி அசாஞ்சேவுக்கு அவர் தெரியப்படுத்தினார். தான் கருவுற்றுள்ளதை தூதரக அதிகாரிகள் கண்டுபிடிக்காமல் இருக்க, பெரிய அளவிலான ஆடைகளை அவர் அணிந்துக்கொண்டார். பின்னர் அவருக்கு கேப்ரியல் என்ற பெண் குழந்தை பிறந்தது.

குழந்தையை தனது வீட்டில் வைத்து ஸ்டெல்லா மோரீஸ் வளர்த்து வந்தார். குழந்தையை தூதரகத்திற்கு அழைத்துச்சென்று, அசாஞ்சேவிடம் எப்படி காட்டுவது என்ற கேள்வி எழுந்தது. அதற்காக, Stephen Hu என்ற பிரிட்டிஷ் நடிகர் ஏற்பாடு செய்யப்பட்டார். அந்த நடிகர் கேப்ரியலை தனது குழந்தை எனக்கூறி, தூதரகத்துக்கு அழைத்துச்சென்று அசாஞ்சேவிடம் காட்டி வந்தார். இதேபோன்று, அசாஞ்சேவுக்கும், அவரது காதலிக்கும் max என்ற மற்றொரு குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தையும் ரகசியமாக வளர்க்கப்பட்டு வந்தது. அசாஞ்சே தனது 2 குழந்தைகளையும் சந்திக்க, நடிகர் Stephen Hu பாலமாக இருந்து வந்தார்.

இந்த தகவல்கள் அனைத்தையும் அசாஞ்சேவின் காதலி ஸ்டெல்லா மோரீஸ் தற்போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அசாஞ்சேவுக்கு தண்டனை விதிக்கப்பட்டால், தனது 2 குழந்தைகளும் தந்தை இல்லாமல் வளரும் நிலை ஏற்படும் எனவும் அவர் உருக்கமாக கூறியுள்ளார். தொடக்கம் முதலே அசாஞ்சேவின் வாழ்க்கை, ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் இருந்து வந்துள்ளது. தற்போது அவரின் காதலி தெரிவித்துள்ள தகவல்கள், அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version