அதிமுக ஆட்சியில் மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டை, அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர் துவக்கி வைத்தனர். பின்னர் அம்மா பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் அண்ணாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனத் தெரிவித்தார். மேலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்டவும் தொடர்ந்து குரல் கொடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.