விசைப்படகு மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரம் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 60 நாட்கள் நடைமுறையில் இருந்தது. மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படும் இந்த நாட்களில் மீனவர்களால் வீசப்படும் வலைகளால் மீன்குஞ்சுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மீன்பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் நிறைவடைவதையொட்டி வேதாரண்யத்தை சுற்றியுள்ள ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் படகுகள் பராமரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விசைப்படகுகளுக்கு வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களும், குறைந்த ஆழத்தில் மீன் பிடிக்கும் மீனவர்களும் வலைகளை சரி செய்யும் பணிகளிலும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, ஃபைபர் படகு மீனவர்களும் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை சரி செய்து வருகின்றனர்.