மீன்பிடி தடைக்காலம் முடிவடைய 3 நாட்களே உள்ள நிலையில், படகுகளை தயார் செய்யும் பணியில் தூத்துக்குடி மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மீன்பிடி தடை காலமானது வரும் ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மராமத்து பணிகள் நிறைவடைந்து கடலில் மீன்பிடிக்க தயாராகிவருகின்றன. படகுகளுக்கு புதிதாக வர்ணம் அடித்தும், பதிவு எண்களை எழுதியும் படகுகளை கடலில் இறக்கும் பணியில் மீனவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட தொடங்கி விட்டனர்.