17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
17வது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், 17வது மக்களவை முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரேந்தர் குமார் அனைத்து உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்களுக்கான தேர்தல் 19ம் தேதி நடைபெறுகிறது. 20ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதையடுத்து, ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஜூலை 5ம் தேதி பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இதனிடையே, நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஒரே தேசம், ஒரே தேர்தல் பிரதமர் மோடியின் கனவாக இருப்பதால், இதுகுறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில், 19ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிப்பார்.