மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை மாலை டெல்லியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. இதையடுத்து கடந்த மே மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் கூட்டம் நாளை மாலை டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகள் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ள மசோதாக்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.