நீலகிரி மாவட்டம் உதகையில் பழங்குடியினர் நலச்சங்கத்தின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பழங்குடியினருக்காக முதன்முதலாக எழுதப்பட்டுள்ள புத்தகத்தை வெளியிட்டார்.
நீலகிரி பழங்குடியினர் நல சங்கத்தின் ஆண்டு விழாக் கொண்டாட்டம் உதகையின் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இதையொட்டி பழங்குடியின மக்களின் கலாச்சாரம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துக் கொண்டு பழங்குடியினரின் வரலாறு குறித்த சிறப்பு கண்காட்சியை கண்டு ரசித்தார்.
இதையடுத்து நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர், பழங்குடியினருக்காக முதல்முறையாக பிரத்யேகமாக எழுதப்பட்ட மொழி என்ற புத்தகத்தை வெளியிட்டார். பழங்குடியினர் வாழ்க்கை மேம்பட நீலகிரி பழங்குடியினர் நலச்சங்கம் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதாக அவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பழங்குடியினர் நலனுக்காக பணிபுரிந்த 20 சமூக ஆர்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி அவர் கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.