திமுக சட்டமன்ற உறுப்பினரும், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலு, மீதான வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, அவருக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். எ.வ.வேலுக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை, பைனான்ஸ் நிறுவனம் திருவண்ணாமலை மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் கணக்கில் வராத 3 கோடியே 70 லட்ச ரூபாய் ரொக்கமாக பிடிபட்டது. பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரணையை தொடங்கினர். அதில் அறக்கட்டளை, கல்லூரி, பைனான்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்ததில், 25 கோடி ரூபாய் வருவாயை மறைத்தது தெரியவந்துள்ளது. வருவாயை மறைத்தது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பென் ட்ரைவ்கள் குறித்து எ.வ.வேலுவிற்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.