குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராம்பூர், கான்பூர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் தரப்பில் பலர் காயமடைந்தனர். இத்துடன், கடந்த 3 நாட்களில் அம்மாநிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்தது. மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இதுவரை 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதுமாக 4 ஆயிரத்து 500 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 124 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெற்ற இடங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட நாட்டு துப்பாக்கிகளின் காலி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது, வன்முறையின்போது காவல்துறையினர் மீது சமூக விரோதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான முகாந்திரமாக கருதப்படுகிறது. வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 263 காவல்துறையினர் காயமடைந்துள்ள நிலையில், அதில் பல பேர் தோட்டா காயங்களுக்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version